தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு வணிக எளிதாக்கல் சட்டத்தை திருத்துவது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: 2036-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரம் 1.5 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டும் வகையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை அமைப்பது அவசியமாகிறது. இதற்காக தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, தொழில் முதலீட்டுக்கான அனுமதி கோரி ஒற்றைச் சாளர இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆணையத்தின் தலைவராக தலைமைச் செயலரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக தொழில் துறை செயலரும், 20-க்கும் மிகாத வகையில் உறுப்பினர்களும் ஆணையத்தில் இடம்பெறுவார்கள்.
முதலீ்ட்டு ஊக்குவிப்பு வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள், திட்டங்களை செயல்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்க ஆணையம் அனுமதி வழங்கும். முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் வழங்கப்பட்டுள்ள அனைத்து முகமைகளின் செயல்பாடுகளையும் ஆணையம் கண்காணிக்கும்.
முதலீடுகளுக்கு தடையாக உள்ள அமைப்பு ரீதியிலான சிக்கல்களைக் கண்டறிந்து மாநிலத்தின் முதலீட்டு சூழலையும், எளிதாக தொழில் தொடங்கி நடத்துவதையும் மேம்படுத்த கொள்கை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும்.

