ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்பை அறிய ‘நலம்’ செயலியில் வசதி: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

Priya
572 Views
2 Min Read

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி, மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சை வசதி மற்றும் மருந்து இருப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘நலம்’ செயலி மேம்படுத்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதம் வருமாறு:

க.மோகன் (அதிமுக): பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்புக் கடிக்கு சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் வழங்க அரசு முன்வருமா?

சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ்: இந்த மருத்துவமனையில் பாம்பு விஷக்கடி முறிவு மருந்து, வெறிநாய்க்கடி நோய் மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவில் உள்ளன.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக): தற்போது நகர்புறங்களிலும் பாம்புக் கடியால் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் பிளஸ் 2 மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விஷ முறிவு சிகிச்சை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதா? அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக் கடி சிகிச்சை வசதி உள்ளதா?

அமைச்சர் அருண் ராஜ்: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவமனைகளிலும் பாம்புக் கடி விஷ முறிவு சிகிச்சை மருந்துகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அளவிலேயே பாம்புக் கடி சிகிச்சை மருந்துகள் உள்ளன.

சில சமயம், சில மருத்துவமனைகளில் மருத்துவர் இல்லை எனும்போது, மற்ற இடங்களுக்குச் செல்லும் சூழல் இருக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லை. பாம்பு கடித்தவுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அந்த பொன்னான நேரத்தைவீணடிக்கக் கூடாது என்பதற்காக மக்களுக்கு எந்த மருத்துவமனையில் பாம்புக் கடிக்கு, மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்கும், அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருக்கிறதா என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக ‘நலம் செயலி’யில் வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

நாகதோஷம், ஜலதோஷம்… சட்டப்பேரவையில் சிரிப்பலை!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘சுகாதாரத்துறை அமைச்சர் பாம்புக்கடி குறித்து விரிவாக பதில் அளித்து வருகிறார். இதன்மூலம் பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி இருப்பதாக தெரிகிறது.

அந்த தொகுதிகளில் எல்லாம் நாகதோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். அதை கழிக்க பிரார்த்தனை ஏதாவது இருந்தால் பேரவை தலைவர் நடத்த வேண்டும்’’ என்றார்.

அமைச்சர் அருண்ராஜ் பேசும்போது, ‘‘இந்த அரசு அறிவியல்பூர்வமான அரசு. தோஷம், பில்லி, சூனியம் போன்றவை மீது நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் தொகுதியில் தோஷ நிவர்த்தி மேற்கொள்ளலாம்’’ என்றார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ‘‘பேரவை திமுக துணைத் தலைவருக்கு ஜலதோஷம். அதைத்தான் முன்னாள் முதல்வர் கூறினார்’’ என்றார்.

உடனே பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், ‘‘கொஞ்சம் தள்ளி உட்காருங்கள். உங்களுக்கும் தொற்றிக் கொள்ளப் போகிறது’’ என்றார். இந்த விவாதம் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply