பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முயற்சித்தால் மீனவர்களுடன் இணைந்து திமுக போராடும்: ஸ்டாலின் எச்சரிக்கை

Priya
705 Views
2 Min Read

‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு முயன்றால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்’ என மு.க.ஸ்டாலின் எச்சரித் துள்ளார்.

சென்னை பட்டினப்பாக் கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதியில் உள்ள அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்தனர்.

அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் தன்னிச்சையான முடிவு கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக் கோரி, மீனவ சங்கத்தினர் என்னை சந்தித்தனர். மீனவ மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவைத் தருவதோடு, தனது முடிவில் இருந்து தவெக அரசு பின்வாங்கும் வரை மீனவ சகோதரர்களுடன் உறுதியாகத் துணை நிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே, தலைமைச் செயலகப் பயன்பாட்டுக்கென கருணாநிதியால் கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகமும் இருக்கிறது.

வேண்டுமென்றால், அங்கே செயல்பட்டு வரும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதை தலைமைச் செயலகமாகப் பயன்படுத்த லாம். ஆனால், கடற்கரையைப் பார்த்தபடி முதலமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என ஜோதிடர் ஒருவர் சொன்னதாலேயே முதல்வர் பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்திருப் பதாக செய்திகள் வருகின்றன.

ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அந்த இடத்தைச் சுற்றி ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன. கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்டது.

இங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாக நேரிடும். முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக் குப்பம் என மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளன.

சீனிவாசபுரம் பகுதியில் 1,356 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் சிதிலமடைந்து உள்ளதோடு, இப்பகுதியில் ஆயிரம் குடிசைகளும் இருக்கின்றன. இவர்களுக்குப் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்கு முந்தைய திமுக ஆட்சியில் பரிசீலனையில் இருந்த இடத்தில்தான் தற்போது ரூ.1,200 கோடியில் தலைமைச் செயலகம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால், அரசாணையையே மறைத்துவிட்டு, ‘விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கோரியிருக்கிறோம், இதில் முதல்வர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என அமைச்சர்கள் பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடிச் செயலாகும்.

அரசாணை வெளியிட்ட பின்னர் முடிவெடுக்கவில்லை எனச் சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் நிர்வாக அறிவு இருக்கிறதா? எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அப்பகுதியில் மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளை அராஜகப் போக்குடன் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply