சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

Priya
882 Views
3 Min Read

உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம்: ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, ‘உச்ச நீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது.’

இந்தக் கோரிக்கையானது, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள வழக்காடிகள் தங்கள் நீதிசார் தீர்வுகளுக்காக புதுடெல்லி வரை செல்ல வேண்டியுள்ளது.

தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரமாக விளங்கும் சென்னையில், இக்கிளையை அமைப்பது, அனைத்து தென்மாநிலங்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் குழுமமானது, மிக்க சட்ட அறிவும், வாதத்திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்ச நீதிமன்றக் கிளையின் தேவைகளை நிறைவு செய்யும்.

சென்னை உயர் நீதிமன்றமானது 1862-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை உயர்நீதிமன்றங்களில் ஒன்றானது என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவித் தரத்துக்கு இணையான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தவறாமல் மாநில அரசு வழங்கும்.

07.08.2007 அன்று உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு இப்பொருண்மை குறித்த தனது முந்தைய தீர்மானங்களிலிருந்து மாறுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என முடிவெடுத்துள்ள நிலையையும், நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, ஏழை – பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர்.

பல நாடுகளில் இல்லாத சிறப்பம்சமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32 இயற்றப்பட்டதற்கான முதன்மைக் காரணமும் இதுவே. நாளடைவில், பிரிவு 32-ன் கீழான தீர்வானது, புவியியல் ரீதியாக இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு அருகில் வசிக்கக் கூடியவர்கள் மற்றும் வழக்குச் செலவுகளையும், பயணச் செலவுகளையும் பொருட்டாகக் கருதாதவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது.

இதனால், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள குடிமக்கள் இச்சலுகையைப் பெறும் வாய்ப்பை புதுடெல்லிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாகவே இழக்க நேரிடுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை (சிவில்) எண்.36/2016 (வி.வசந்தகுமார் – எதிர் – எச்.சி.பாட்டியா மற்றும் சிலர்) வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் 13.07.2016 அன்று பிறப்பித்த உத்தரவில், எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளில், உச்ச நீதிமன்றத்தின் அமர்வை அமைப்பது என்பதும் ஒன்றாகும்.

இவை குறித்து, ஓர் உறுதியான முடிவைப் பெறுவதற்காக அரசியலமைப்பு அமர்வு ஒன்று அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, இவ்வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தென்னிந்திய மாநிலங்களில், சென்னையின் முக்கியத்துவத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கை மற்றும் காரணங்களைக் கருத்தில் கொண்டு, சென்னையில் உச்ச நீதிமன்ற அமர்வை அமைப்பது குறித்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சாதகமான முடிவைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைப்பது நமது நாட்டின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தும். 2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இவை தொடர்பாக அளித்த பரிந்துரைகள், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர மண்டலக் கிளைகளின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தும் சட்ட ஆணையங்களின் அறிக்கைகள் மற்றும் இத்தகைய கிளைகளின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியாவின் தலைமை நீதிபதியிடமே உள்ளதால், அவை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது’ என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply