காவிரி விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து ஆக.3-ல் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின்

Priya
409 Views
4 Min Read

தமிழ்நாடு அரசியல் களத்தில் காவிரி நீர் பங்கீடு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மீண்டும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தமிழக வெற்றி பெற்றக் கழக (தவெக) அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும், குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மாநிலத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளைச் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டு, தவெக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தனது காரசாரமான அறிக்கையில் மு.க. ஸ்டாலின் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வரும் தவெக அரசு, காவிரி உரிமையைக் காப்பதிலும் தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என தவெக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி என அரசு அறிவித்ததால் கொதித்தெழுந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னரே ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி என மாற்றியமைக்கப்பட்டது. “சொன்ன வாக்குறுதியை முழுமையாகச் செயல்படுத்த இன்னும் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதைக்கூட முதலமைச்சர் விவசாயிகளிடம் தெளிவுபடுத்தவில்லை” என்று மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அண கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கர்நாடக முதலமைச்சர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகேதாட்டு திட்டத்திற்கு நிதியுதவியும் ஒப்புதலும் கோரியுள்ளார். டெல்லியில் கர்நாடக எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டி, மேகேதாட்டு அணை கட்டக் கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்றும் கர்நாடகா தொடர்ந்து கூறி வருகிறது.

ஊடகங்களில் மேகேதாட்டு அண கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு பகிரங்கமாகப் பேசி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதி அமைதி காப்பதாக மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைக் திறக்க முடியாது என கர்நாடகா அறிவித்த பிறகும், தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் வாய்மூடி மெளனமாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் கூறியதும், பின்னர் அதனை மறுத்ததும் அரசின் தெளிவற்ற நிலையைக் காட்டுவதாக மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். தற்போது ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக முதலமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகக் கர்நாடக முதலமைச்சரே தெரிவித்துள்ளார். மேகேதாட்டு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த அமைதிப் பயணம் தமிழகத்தின் உரிமையை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

“தனது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் எவ்வித சிக்கலும் வரக்கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் மேகேதாட்டு விவகாரத்தில் மவுனம் காப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன; அதற்கு அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் இல்லை” என்று மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் விவசாயச் சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டக் கோரிக்கை விடுத்தும் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று சாதனை படைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் வெறும் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. இதனால் சுமார் ரூ.2,500 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டு, 14 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் வாழ்வாதாரமின்றித் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாகத் தமிழக அரசு நிவாரணத் தொகுப்பினை அறிவிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்:

ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக ரூ.25,000 உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கான முழு பிரீமியம் தொகையையும் அரசே ஏற்று செலுத்த வேண்டும்.

சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை 100% மானியமாக வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையில் தவெக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் தோழமைக்கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றும், தவெக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply