சென்னை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் இதுவரை 207 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தெரிவித்தார். கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்தில் இதுவரை மொத்தம் 207 குற்றங்கள். 100 சதவிகித குற்றங்கள் கடந்த ஒரு மாத தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ மொழி தெரியாத அந்த பெற்றோர்களிடம் கைநாட்டு பெற்று சென்று இருக்கிறார். தமிழக முதலமைச்சர் விஜய் ப்ரோ.! இந்த 3 வயது குழந்தையை பாருங்கள் ப்ரோ..! அங்கிள் என்று நரம்பு புடைக்க பேசினீர்.! இந்த 3 வயது குழந்தைக்கு யார் பதில் சொல்வார்கள்? பெரம்பூரில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு யார் பதில் சொல்வார்கள் ஜோசப் விஜய் ப்ரோ..!? சட்டமன்ற உறுப்பினர் வந்து மிரட்டுகிறார்.
மக்களைப் பற்றி கவலை இருந்தால் சட்டம் ஒழுங்கை சரி செய்திருப்பார்களா இல்லையா?
திருச்சி கூட்டத்தில் நன்றி அறிவிப்பு என்று நரம்பு புடைக்க பேசினீர்கள். 18ம் தேதி நீங்கள் சட்டமன்றத்தை தொடங்க உள்ளீர்கள். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 18ம் தேதி பாஜ சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். சட்டம் ஒழுங்கை காக்க தவறிய முதலமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பள்ளிக்கூடத்திற்கு அவர்களை அனுப்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜோசப் விஜய் ஆட்சியில் இந்த கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி இது. 6 மாதத்திற்கு குறை சொல்லக்கூடாது என்று தான் இருந்தோம். ஆனால் முடியவில்லை, இந்த ப்ரோ ஆட்சி அவ்வளவு மோசமாக உள்ளது. இந்த விஷயம் அவருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பு இல்லை, தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்.
காவல்துறை முற்றிலுமாக கெட்டு போய்விட்டது இந்த ஆட்சியில். இந்த மாதிரியான கட்சிகள் ஆட்சியில் வளர விடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

