தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி ஜூன் 29-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதில் சமரசம் கூடாது. சிங்கப்பெண் படையில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நீரும், நிலமும், கடலும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துத் தர வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டப்படக் கூடாது. முந்தைய அரசின் நிலைதொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இது வெறும் அணை மட்டும் கிடையாது. 2 மாநிலங்களின் உறவும், உயிரும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எவ்வளவு அணைப்போட்டாலும் காவிரித் தாய் தமிழகம் நோக்கி ஓடிவருவார்.
விவசாயிகள் பயிர்க் கடன்களை தமிழக அரசு முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதியையும் மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி, ஜூன் 29-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு கூறினார்.

