மராட்டிய அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும், மீண்டும் நமக்கு சொல்லும் செய்தி என்னவெனில், பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய விதிகள் தடையில்லை; மனம் மட்டும் இருந்தால் எதுவும் தடையில்லை என்பது தான் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மராட்டியத்தில் 55.72 லட்சம் விவசாயிகள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சில நாள்களுக்கு முன் தள்ளுபடி செய்த ரூ.2,044 கோடி கடனுடன் ஒப்பிடும் போது இரு மாநிலங்களின் கடன் தள்ளுபடிக்கு இடையிலான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாகத் தோன்றுகிறது.
மும்பையில் நடைபெற்ற மராட்டிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு வரலாற்று சிறப்புமிக்க தாகும். மராட்டிய பயிர்க்கடன் தள்ளுபடியால் அம்மாநில விவசாயிகள் அடைந்துள்ள பயன்களின் உயரத்தை, தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த பயன்களின் உயரத்தில் இருந்து ஏணி வைத்தாலும் எட்ட முடியாது என்பது தான் உண்மையாகும்.
முதலாவதாக, தமிழ்நாட்டில் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் அதிகபட்சமாக ரூ.50,000 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு ரூ.5000-ம் மட்டும் தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மராட்டியத்தில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனிலும் ரூ.2 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு விவசாயி ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தால் ரூ.1 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும். அதற்கும் போதியக் காலக்கெடு வழங்கப்படும்.
இரண்டாவதாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான 10 மாதங்களில் வாங்கப்பட்ட கடனின் ஒரு பகுதி மட்டும் தான் தள்ளுபடி செய்யப்படும். ஆனால், மராட்டிய மாநிலத்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் வரையிலான ஆறாண்டுகளில் வாங்கப்பட்ட கடன்களில் ரூ. 2 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். இதனால், மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொண்ட விவசாயிகள் கூட கடன் தொல்லையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
மூன்றாவதாக, தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்தால் 14.22 லட்சம் பேர் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சில ஆயிரம் பேருக்குக் கூட முழுமையான கடன் தள்ளுபடி கிடைக்காது. மாறாக, மராட்டியத்தில் 55.72 லட்சம் பேருக்கு முழுமையான கடன் அல்லது ரூ.2 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் உழவர்கள் கடனில் இருந்து விடுதலையாகி உழவைத் தொடர முடியும்.

