பொங்கல் பண்டிகைக்கான வேட்டி – சேலை கொள்முதல் பணி வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
இக்கூட்டத்தில், நூல் கொள்முதல் மற்றும் வேட்டி, சேலை உற்பத்தியின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், குறித்த காலத்துக்குள் உற்பத்தியை நிறைவு செய்திட கூடுதல் தறிகளை இயக்கவும், நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் வேட்டி, சேலை உற்பத்தி செய்யவும், டிசம்பர் 2026-க்குள் வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளை நிறைவு செய்து பொங்கல் பண்டிகைக்கு முன் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை செயலாளர் லில்லி, துணிநூல் துறை ஆணையர் ஷோபனா, கைத்தறித் துறை இயக்குநர் உமாமகேஸ்வரி மற்றும் கைத்தறித் துறை, துணிநூல் துறை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

