மக்களின் இயற்கை ஆர்வத்தை வியாபாரமாக்க களமிறங்கிய பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் பதஞ்சலி நிறுவன தயாரிப்பு பொருட்கள் மீதான தொடர் சர்ச்சைகள் அதன் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கின. இதனால் பதஞ்சலி பெரும் சரிவை சந்தித்தது. இதுபோதாதென்று மக்கள் இல்லங்களில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருளான மிளகாய் பொடி தயாரிப்பும் புதிய பிரச்சனையில் சிக்கியிருக்கிறது.
தன்னுடைய நகைச்சுவை உணர்வு மற்றும் யோகா கலை மூலம் பிரபலமானவர் பாபா ராம்தேவ். இவர் நிறுவிய பதஞ்சலி நிறுவனம் மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பதஞ்சலியின் தயாரிப்புகள் அனைத்தும் இயற்கையான பொருட்களால் செய்யப்படுபவை என்று நுகர்வோரிடம் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றது. இந்நிலையில், பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் தரமற்றதாகக் கூறி ராணுவ கேன்டீன்களில் விற்க தடை விதிக்கப்பட்டது.
இதுபோதாதென்று, தங்களது தயாரிப்புகள் கொரோனாவை தடுக்கும் என பதஞ்சலி விளம்பரம் செய்தது பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இறுதியில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஒரு வழியாக அந்த சம்பவமும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது.
இப்படி பல பிரச்சனைகளை தாண்டி வந்த பதஞ்சலி நிறுவனம், தற்போது புதிய தலைவலியை சந்தித்திருக்கிறது. அந்நிறுவனம் தயாரிக்கும் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், பரிசோதனைக்குப்பின் அதை உறுதி செய்தது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம். இதனை ஏற்றுக்கொண்ட பதஞ்சலி நிறுவனம், 200 கிராம் மிளகாய் பொடி பாக்கெட்டுகள், அதாவது சுமார் 4 டன்கள் அளவிலான பாக்கெட்டுகளை விற்பனை நிலையங்களில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி ஒவ்வொரு மாநில பரிசோதனையிலும் பதஞ்சலியின் சில பொருட்கள் தர பரிசோதனையில் தோல்வியடைந்து வருகின்றன. இந்த செய்திகள் ஒவ்வொரு முறையும் செய்தி ஊடகங்களில் வரும் போதும் பதஞ்சலி குறித்த விளம்பரங்கள் நின்றபாடில்லை. நடவடிக்கையும் இல்லாதது ஏன்? என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.