தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் ரூ.34.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பள்ளிகளில் கட்டாய ஹிந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் நடராசன் உயிரிழந்தார். அதற்கடுத்த இரண்டு மாதங்களில் அதே போராட்டத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார் தாளமுத்து. ஆனால், சிறைபட்ட மூன்று வாரங்களுக்குள் உயிரிழந்தார்.

மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்துக்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிரிழந்த இவர்கள் இருவரின் நினைவாக, சென்னை மூலக்கொத்தளத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதுப்பிக்கவும்,மொழிப்போர் தியாகிகள் தினத்தை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என பெயரிட்டு அழைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, திமுக சார்பில் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசவுள்ளார். இதேபோன்று பிற மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்று பேசவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here