அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் பற்றாக்குறை இருப்பதால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை மருத்துவ கல்லூரியில் 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், 2026- 27-ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து, ரூ.23.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்வி சார்ந்த வீடியோ உருவாக்க அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர், மாணாக்கர்களிடையே தொழில் முனைவு திறனை ஊக்குவிக்கும் நோக்கில் மருத்துவ கல்லூரியில் புதிய உரையாடல் தொடர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறப்பு மிக்க நிகழ்வான ஆண்டு தோறும் நடைபெறும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு குறித்த முன்னோட்ட விளம்பர பதாகையை அமைச்சர் வெளியிட்டார்.
முன்னதாக மருத்துவ நெறிமுறைகள் சார்ந்த உறுதி மொழியை அமைச்சர் முன்னிலையில் மருத்துவ மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) லோகநாயகி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி டீன் சாந்தாராமன், துணை டீன் வித்யா, மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொ) சுதாகரன், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் லூக் ரவி செல்லையா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், “நீங்கள் அனைவரும் நீட் தேர்வில் கடினமாக படித்து, இப்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் இணைந்திருக்கிறீர்கள். கல்லூரி நாட்களில் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக செல்லும் நீங்கள் முதலில் பொறுப்புள்ள குடிமகனாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் உங்களுடைய உரிமைகள், கடமைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு, இந்த சமூகத்துக்கு சேவையாற்ற முடியும். இதுவரை நமக்கு அறிவை கொடுத்தது நம்முடைய புத்தகங்கள்.
ஆனால் இனிவரும் காலங்களில் மருத்துவர்களுக்கு அறிவு என்பது அனுபவம் தான். அந்த அனுபவம் என்பது நம்முடைய அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தான். நோயாளிகளின் வலிகளை புரிந்து, அவர்களை மதிக்க வேண்டும்” என்றார்.
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காய்ச்சல் பரவும் காலம் என்பதால், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 15,933 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், இந்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார்.

