விக்ரமின் புதிய படத் தலைப்பு ‘பவர் ஹவுஸ்’ – அறிமுக வீடியோ எப்படி?

Priya
768 Views
1 Min Read

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இது விக்ரமின் 63-வது படமாகும்.

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அந்நிறுவன சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சியான் விக்ரம் களமிறங்கும் ‘பவர் ஹவுஸ்’. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் படம் 2027-ல் திரையரங்குகளில் வெளியாகிறது’ எனக் கூறி தலைப்பு ப்ரொமோவையும் வெளியிட்டுள்ளது.

3.36 நிமிடம் ஓடும் அந்த டைட்டில் ப்ரொமோவில், தன் குடும்பத்தினருடன் கல்யாண கேட்ரிங் தொழில் செய்துவரும் விக்ரம், ஒரு கல்யாணத்துக்கான சமையல் ஆர்டர் குறித்து நூறு சதவீதம் கேரண்டி என்று சொல்வதுடன் தொடங்குகிறது.

தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் வேலைகளைப் பிரித்துகொண்டு செய்வது காட்டப்படுகிறது. தன் அண்ணன் மகளால் ஏற்படும் சின்ன கலாட்டாவுக்கு அடுத்து, முந்திரி பருப்பு எடுக்க ஸ்டோர் ரூம் செல்லும் விக்ரம், அங்கு முற்றிலும் வேறு ஒருவராக மாறிவிடுகிறார்.

ஸ்டோர் ரூமில் ரத்தம் ஒழுக இரண்டு பேர் கட்டிவைக்கப்பட்டு இருக்க, எந்தச் சலனம் இல்லாமல் தரையில் வடிந்திருக்கும் ரத்தத்தை அமைதியாக துடைக்கிறார் விக்ரம். அதில் ஒருவனிடம் ‘இப்போதான சமைக்க ஆரம்பிச்சிருக்கேன். ‘ஃபுல் மீல்ஸ்’ கொடுத்துதான் அனுப்புவேன். நூறு சதவீதம் கேரண்டி’ என்கிறார்.

இந்தப் படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் 2027-ம் ஆண்டு திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply