அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முப்படைகளின் தலைமைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்ரமணி நேற்று அறிவித்தார்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) இளைஞர்களைக் குறுகிய கால அடிப்படையில் பணியமர்த்துவதற்காக, மத்திய அரசு ‘அக்னிபாத்’ என்ற புதிய ஆட்சேர்ப்பு திட்டத்தை கடந்த 2022-ல் அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு 6 மாத கால ராணுவப் பயிற்சியுடன் சேர்த்து, மொத்தம் 4 ஆண்டுகள் முப்படைகளில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, தகுதியின் அடிப்படையில் 25% வீரர்கள் ராணுவத்தில் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவர். மீதமுள்ள 75% வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, அக்னிபாத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தங்கள் ஆரம்பகட்ட 4 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரர்களில் 25% பேர் வழக்கமான ராணுவ வீரர்களாக சேர்க்கப்படுவார்கள்.
மீதமுள்ள 75% பேரைப் பொறுத்தவரை, அவர்களுக்கு 2-வது முறையாக இரண்டு வருட பணிக்காலம் வழங்கப்பட வேண்டும் என்று முப்படைகள் பரிந்துரைத்தன. அதனை ஏற்று அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு கால பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.
டிச.31-ல் வெளியேறும் நிலை
கடந்த 2022-ல் முப்படைகளில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்களில் முதல் தொகுப்பில் ராணுவத்தில் 19,000 பேர், விமானப்படையில் 2,850 பேர், கடற்படையில் 2,550 பேர் என முப்படைகளிலும் மொத்தமாக 24,400 அக்னி வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 18,300-க்கும் மேற்பட்ட அக்னி வீரர்கள் தங்களது 4 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்து, டிசம்பர் 31-க்குள் முப்படைகளில் இருந்து வெளியேற இருந்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இவர்களுக்கு கூடுதலாக 2 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

