தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டு நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் நாத் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் நாத் பயனாளிகளுக்கு நிதியுதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போன சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு, அவசர நிவாரணமாகச் சுழல் நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான விடுவிப்பு ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் உத்தரவின்படி இந்தாண்டு முதல் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.98 லட்சம் மீனவ குடும்பங்கள் பயனடைவர்.
இதற்காக மொத்தம் ரூ.138.75 கோடி நிதி கடலோர மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகையாக வழங்கப்படும். மேலும், கடல் மீனவர் மற்றும் மீனவ மகளிர் சேமிப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் செலுத்தும் பங்குத் தொகையான ரூ.1,500-க்கு இணையாக, அரசு தனது பங்காக இருமடங்கு (ரூ.3 ஆயிரம்) சேர்த்து, மீன்பிடி குறைவு காலங்களில் மொத்தம் ரூ.4,500 வழங்கி வருகிறது.
நடப்பாண்டில் 2.08 லட்சம் கடல் மீனவர்களுக்காக அரசின் பங்குத் தொகையாக ரூ.62.53 கோடியும், 2.02 லட்சம் மீனவ மகளிருக்காக ரூ.60.71 கோடியும் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தங்களது மீன்களைச் சுகாதாரமான முறையில் சந்தைப்படுத்தி அதிக வருவாய் ஈட்டும் வகையில், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குளிர்காப்பு பெட்டிகளுடன் கூடிய 35 இருசக்கர வாகனங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

