“குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது” – காங். எம்.பி ஜோதிமணி கருத்து

Priya
5 Views
2 Min Read

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே அதை எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் எடுக்கமுடியாது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் தவெக தலைவர் ஜோசப் விஜய்யை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.

தமிழக மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சியால் ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது. இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது.

குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில், பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக, குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும், அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும்.

தலைவர் ராகுல் காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply