உலகில் முதல் முறையாக வாரத்துக்கு ஒரு முறை செலுத்தும் ‘அவிக்லி’ என்ற இன்சுலின் ஊசியை, நோவோ நார்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ரத்தத்தில் சர்க்கரை தேங்குவதைத் தடுத்து, அதை உடலில் உள்ள செல்களுக்கு கடத்த உதவும் ஹார்மோன் இன்சுலின் ஆகும். டைப் 1 நீரிழிவு அல்லது தீவிரமான டைப் 2 நீரிழிவு உள்ள நோயாளிகள், தங்களின் இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான வரம்புக்குள் வைத்திருக்க, நாள் ஒன்றுக்கு ஒரு முறையோ, அல்லது பல முறையோ இன்சுலின் செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நோவோ நார்டிஸ்க் என்ற மருந்து நிறுவனம், ‘டைப் 1’ மற்றும் ‘டைப் 2’ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கான உலகின் முதல் வாராந்திர இன்சுலின் ‘அவிக்லி’யை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இது, ஆண்டுக்கு 365 முறை செலுத்த வேண்டிய இன்சுலின் ஊசிகளின் எண்ணிக்கையை, 52 ஆக குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஊசி செலுத்திக்கொள்வதில் உள்ள பயத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயாளிகள் சிகிச்சையைத் தவறாமல் பின்பற்றுவதை மேம்படுத்தும். தினசரி ஊசி என்ற பயம் காரணமாகவே, இந்தியாவில் இன்சுலின் சிகிச்சையைத் தொடங்குவது சராசரியாக 7 முதல் 9 ஆண்டுகள் வரை தள்ளிப்போகிறது.
இந்தியாவில் சுமார் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயுடனும், சுமார் 13.6 கோடி பேர் ஆரம்பகட்ட நீரிழிவு நிலையிலும் உள்ளனர். மேலும், நமது நாட்டில் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதன் சிகிச்சை பெரும்பாலும் இன்சுலின் முறையைச் சுற்றியே அமைகிறது. அவிக்லி வாரத்திற்கு ஒரு முறை ‘ஃபிளெக்ஸ் டச் எனப்படும் பேனா வடிவிலான கருவி மூலம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த எளிமையான முறை, சிகிச்சையைத் தவறாமல் தொடர உதவுவதோடு, ஊசிக்கு பயந்து சிகிச்சையைத் தொடங்கத் தயங்கும் நோயாளிகளை விரைவாக இன்சுலின் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ.261 (70 யூனிட்). உலகின் மிக அதிகமான நீரிழிவு நோய் பாதிப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதால் இந்த அறிமுகம் முக்கியத்துவம் பெறுகிறது.

