பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்தது. இந்தச் சூழலில் கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது.
தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 என உயர்ந்துள்ளது. அங்கு டீசல் விலை ரூ.90.67-ல் இருந்து ரூ.91.58 என விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.104.49 என விற்பனை ஆகிறது. டீசல் விலை 86 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.11 என விற்பனை ஆகிறது.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.109.70 என விற்பனை ஆகிறது. டீசல் விலை 94 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 96.07 என விற்பனை ஆகிறது.

