ஓமன் கடல் பகுதியில் வணிக கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்

Priya
743 Views
2 Min Read

ஓமன் கடற்கரை அருகே வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (திங்கள்கிழமை) மாலை ஓமனின் லிமா பகுதிக்கு அருகே ‘MSV AL JUSUFI’ என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த 14 இந்தியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக காயமடைந்த ஓர் இந்தியர் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஓமனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன் மீட்கப்பட்ட இந்தியர்களையும் உயிரிழந்தவரின் உடலையும் விரைவில் தாயகத்துக்குக் கொண்டு வர ஓமன் அதிகாரிகளுடன் ஓங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்புவதற்கும் பதற்றத்தைத் தணிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ராஜதந்திர தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மற்றும் பொது மக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, இந்த பிராந்தியத்தின் சர்வதேச நீர்வழிகள் வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றம் வணிக நடவடிக்கைகள் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் உறுதிப்படுத்தி இருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நவ. 2 அன்று 14 இந்திய மாலுமிகளுடன் சென்ற ‘MSV AL JUSUFI’ என்ற இந்திய கப்பல், ஓமன் கடற்கரைக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வான்வழிப்பொருள் ஒன்றால் தாக்கப்பட்டது.

13 பேர் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால், குஜராத்தைச் சேர்ந்த மாலுமி கந்தர் நஹிம் அஜிஜ், துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply