இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளுக்குத் தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்பட உள்ள இந்த விருதுகளுக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 2026 ஜூலை 31 கடைசி நாளாகும்.
கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பரிந்துரை செயல்முறை, தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர் மற்றும் சமூகத்திற்குத் தன்னலமற்ற சேவை புரிந்தவர்களைக் கௌரவிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும். ‘மக்களின் பத்மா’ (People’s Padma) என்ற முன்னெடுப்பின் கீழ், சாமானிய மக்களும் தங்களுக்குத் தெரிந்த சாதனையாளர்களைப் பரிந்துரைக்கலாம் அல்லது தங்களையே (Self-nomination) முன்மொழியலாம்.
குறிப்பாகப் பெண்கள், நலிந்த பிரிவினர், எஸ்சி/எஸ்டி சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அடிமட்ட அளவில் (Grassroots) அங்கீகாரம் பெறாமல் உழைக்கும் சாதனையாளர்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்குமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் (மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர) இந்த விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர், ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ ராஷ்ட்ரிய புரஸ்கார் (Rashtriya Puraskar) இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பரிந்துரைக்கப்படும் நபரின் சாதனைகளை விளக்கும் 800 வார்த்தைகளுக்கு மிகாத ஒரு விளக்கக் குறிப்பையும் (Citation) இதனுடன் இணைக்க வேண்டும். ஜூலை 31-க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

