ஆதரவற்ற இளைஞரான ஜெய், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனக்கென குடும்ப பாசம் எதுவும் இல்லாத நிலையில் வாழும் அவர், ஒரு சந்தர்ப்பத்தில் மீனாட்சி கோவிந்தராஜனை சந்திக்கிறார். முதல் பார்வையிலேயே அவர்மீது காதல் கொள்ளும் ஜெய்க்கு, அதே நாளில் மீனாட்சியை ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த சம்பவம் இருவரையும் நெருக்கமாக்க, பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் – மீனாட்சி, அங்கு கருடன் ராம் நடத்தும் ஒரு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். ஆரம்பத்தில் அமைதியாக செல்லும் அவர்களின் வாழ்க்கை, அந்த ரிசார்ட்டை சுற்றி நடக்கும் சில மர்ம சம்பவங்களால் குழப்பமாக மாறுகிறது. குறிப்பாக ரிசார்ட்டில் ஏதோ தவறான விஷயம் நடக்கிறது என்பதை ஜெய் உணர தொடங்குகிறார். இதனால் கணவன் – மனைவி இடையேயும் பிரச்சனைகள் உருவாகின்றன.
இதற்கிடையில், மீனாட்சியின் தந்தையும் அமைச்சருமான அஜய், தனது மகளை இன்னொருவருக்கு இரண்டாம் திருமணமாக கொடுக்க முடிவு செய்கிறார். மறுபுறம், மீனாட்சியின் நண்பர் ஒருவரும் அவரது சொத்துக்காக திருமணம் செய்ய திட்டமிடுகிறார். இப்படி பல சதிகள் மற்றும் மர்மங்கள் சூழ்ந்த சூழலில், ஜெய் – மீனாட்சி இருவரும் அனைத்து பிரச்சனைகளையும் கடந்து ஒன்றாக வாழ்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்துள்ள ஜெய், ஐடி இளைஞராக மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல், உணர்ச்சி, பாசம், கோபம், அழுகை என பல்வேறு உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக மீனாட்சியுடன் வரும் காதல் காட்சிகளில் அவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளது. நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். ஜெய் மீது காட்டும் பாசம், தந்தை மீது இருக்கும் வெறுப்பு, நண்பரிடம் வெளிப்படும் கோபம் போன்ற காட்சிகளில் தனது நடிப்பால் கவர்கிறார்.
கருடன் ராம் மற்றும் அஜய் இருவரும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் மிரட்டியுள்ளனர். அவர்களின் நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது. யோகி பாபு வரும் காட்சிகள் படத்தின் சீரியஸான சூழலுக்கு நடுவில் லேசான நகைச்சுவையை கொடுத்து சிரிக்க வைக்கின்றன.
இயக்குநர் பாபு விஜய், காதல், ஆக்ஷன், கிரைம், திரில்லர் ஆகிய அம்சங்களை கலந்து கமர்ஷியல் பாணியில் படத்தை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, பின்னர் வேகம் எடுத்து விறுவிறுப்பாக மாறுகிறது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், மர்மம் மற்றும் திரில்லர் அம்சங்கள் அதை மறக்க வைக்கின்றன.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றபடி சஸ்பென்ஸை அதிகரிக்கிறது. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு, குறிப்பாக கொடைக்கானலின் காட்சிகளை அழகாக காட்டி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
சட்டென்று மாறுது வானிலை – சினிமா விமர்சனம்

Leave a Comment
