மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, விக்னேஷ், ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் வழங்கும் இந்தப்படத்தை ஃபார்சூன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
முதல் காட்சியைத் தொடங்கி வைத்து இளையராஜா பேசும்போது, “நான் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக் கொண்டேன். உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள்.
ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை.
இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும். ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையைக் கேட்கச் செய்துள்ளனர்.
2 நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், 3-வது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. இசையமைப்பது என் வேலை.
கடவுள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறார்; நான் அதைச் செய்கிறேன். என் வேலை என்னவோ, அதுதான் சரஸ்வதி எனக்குக் கொடுத்தது. அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

