‘நான் சினிமாவில் மூத்த ஜென்ஸீ’ – கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பதிவு

Priya
658 Views
1 Min Read

சினிமாவில் தனது 67-ம் ஆண்டு பயணத்துக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், நான் சினிமாவில் இருக்கும் மூத்த ஜென்ஸீ என்றும் கூறியுள்ளார். 

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’என்னுடைய 67-வது ஆண்டு சினிமா பயணத்துக்காக என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்த 67 ஆண்டுகளில், ஒரு 20 ஆண்டுகளைத்தான் என் கற்றலுக்கான ஆண்டுகளாக நான் கணக்கில் கொள்ள முடியும். மீதமுள்ளவை நீரோட்டத்தில் கலந்து போனவையே.

எவ்வளவு கருப்பாக அந்த நீர் மாறினாலும், அதில் இருக்கும் நம்பிக்கையான விஷயம், அது கூட்டு சினிமா என அழைக்கப்படும் பெருங்கடலில் சென்று சங்கமிக்கிறது என்பதுதான். கலைஞர்கள், பார்வையாளர்கள் என நாமும் அதை நோக்கியே ஓடுகிறோம்.

அதனால், இந்த துறையில் நான் இருக்கும் ஆண்டு கணக்குகளை மக்கள் எண்ணிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அதைவிட சிறந்த வேறு ஒன்றைத் தேடி போவதற்கு முன்பு, எனது அனுபவத்தை இன்னும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.

லூமியர் சகோதரர்கள் 1895 டிசம்பரில் சினிமாவை பொதுவெளியில் திரையிட்ட நாள் தொடங்கி அதன் வயது கிட்டத்தட்ட 130 ஆண்டு 8 மாதம். இந்தக் கணக்கில் பாதிக்கும் அதிகமான காலமாக 67 ஆண்டுகள் நான் இந்தத் துறையில் பயணிக்கிறேன் என்று எனது குழுவினர் எனக்கு நினைவூட்டினர். ஆனாலும் என்னுடைய உண்மையான கற்றல் என நான் சொல்வது 20 ஆண்டுகளை மட்டும்தான். நான் சினிமாவில் இருக்கும் மூத்த ஜென்ஸீ’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் ‘களத்தூர் கண்ணம்மா’ திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் 1960-ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வெளியானது. அதன்படி கமல்ஹாசன் திரைத்துறைக்கு அறிமுகமாகி 66 ஆண்டுகளை நிறைவு செய்து, 67-வது ஆண்டில் பயணிக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply