காமராஜரின் வாழ்க்கைக் கதையைச் சொன்ன ‘காமராஜ்’ திரைப்படத்தை நாட்டுடமையாக்க வேண்டும் என்று அப்படத்தின் இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது. பெருந்தலைவருக்கான முதல் திரை ஆவணம் அதுதான். அதைத் தயாரிக்க பல்வேறு தரப்பிடம் உதவியும், வங்கிக்கடனும் பெறப்பட்டது. அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
‘காந்தி’ படத்துக்கு மத்திய அரசு உதவியது. ‘அம்பேத்கர்’ படத்துக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் ரூ.18 கோடி கொடுத்து உதவின. தமிழக அரசு ‘பெரியார்’ படத்துக்கு உதவியது. அதே போல காமராஜரை ஒரு வழிகாட்டியாகக் கொண்டுள்ள தங்கள் அரசும் எனக்கு உதவும் என்ற நம்புகிறேன். ‘காமராஜ்’ படத்தை நாட்டுடைமையாக்கி, உலகத் தமிழர்களுக்குச் சமர்ப்பிக்கும்படி வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

