அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘அன்பில் அவன்’. ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் அசோக் செல்வன் பேசும்போது, “சினிமா என்றால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பேன். அப்படிப்பட்ட படத்தில்தான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். ஒரு படத்தின் போஸ்டரில் என் பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம், எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
இந்தப் படத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டோம். இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்தான். பெரிய படங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இது மாதிரி சின்ன படத்துக்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர் சிறந்த வகையில் ஆக் ஷன் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்க அனுபவமாக இருக்கும்” என்றார். அக்.2-ம் தேதி இப்படம் வெளியாகிறது

