“ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா?” – நடிகர் பிரஜின் ஏக்கம்

Priya
51 Views
2 Min Read

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘அந்தரன்’.

இந்தப் படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி.சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், விஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார்.

பரபரப்பான க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படம், ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் பிரஜின், ”இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும்.

நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply