உலக தங்க கவுன்சில் இந்தியப் பிராந்திய சிஇஓ சச்சின் ஜெயின் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 6% குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 2025-ம் ஆண்டின் இதே காலாண்டில் 139.7 டன்களாக இருந்த உள்நாட்டு தங்கத்தின் தேவை தற்போது 131.4 டன்களாக குறைந்தது.
அளவின் அடிப்படையில் தேவை குறைந்திருந்தாலும், ரூபாய் மதிப்பின் அடிப்படையில் இது அதிகரித்துள்ளது. அதன்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,98,100 கோடி மதிப்பிலான தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தின் (ரூ.1,32,500 கோடி) மதிப்பை விட 50% அதிகம்.
விலை அதிகமாக இருந்தாலும் இந்திய நுகர்வோர் தங்கத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதை இது காட்டுகிறது. மேலும் தங்கம் மீதான சுங்க வரியை இந்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கக் கடத்தல் மற்றும் சட்டவிரோதக் கறுப்புச் சந்தை வர்த்தகம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அத்தியாவசியமற்ற முறையில் தங்கம் வாங்குவதைக் குறைத்து அந்நியச் செலவாணி கையிருப்பைச் சேமிக்க உதவுமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

