#பத்து மலை முருகன்-3
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் வித்தியாசம் இருக்கிறது… மலேசியா வந்திறங்கியதிலிருந்து இந்திய நேரத்தை யாரும் கடைபிடிக்கக் கூடாதென கறாராக சொல்லிவிட்டனர்..
ஆனால், அதை கடைபிடிப்பதென்பது சவாலான காரியமாக இருந்தது.. மதிய உணவை முடித்து விட்டு அடுத்த 2 மணி நேரத்தில் இரவு உணவை எடுத்துக் கொண்டோம்…
நம் இந்திய நேரம் 10.30 மணிக்கு நாங்கள் விழித்துக் கொண்டிருந்தோம்.. ஆனால் மலேசிய நேரப்படி அப்போது ஒரு மணி…
அடுத்த 3 நாட்களுக்கு இந்த வழக்கத்தைதான் கடைபிடிக்க வேண்டுமென சொல்லி விட்ட பிறகு அதைத் தானே கடைபிடித்தாக வேண்டும்..
மலேசிய நேரப்படி மணி நள்ளிரவு 1 மணி… ஆனாலும் உறக்கம் கண்களைத் தழுவவில்லை… முதல் நாள் என்பதால் இப்படி இருக்கும் .. என நினைத்தபடி கண்களை மூடினேன்.. மிகச் சரியாக 2 மணி நேரம் மட்டுமே உறக்கம் வந்தது…
4 மணிக்கு மறுபடியும் விழிப்பு வந்துவிட்டது…அன்றைய பொழுது எங்களுக்கு மலேசியாவில் விடிந்தது.
காலை 7.30 மணிக்கு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…
7.45 மணிக்கு நானும் என்னுடைய அறையில் உடன் தங்கியிருந்த ராம் அரவிந்தும் உணவு அருந்த சென்றோம்..
அந்த உணவகம் இருந்த ஹாலில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என அனைவரும் நிரம்பியிருந்தனர்…
இங்கும் அதே பஃபே சிஸ்டம் தான்.. ஆனால் இதுவரை பார்க்காத மாதிரி வித்யாசமான உணவுகளை நிரப்பி வைத்திருந்தனர். அதெல்லாம் மலேசியாவின் பிரதான உணவுகள் என்றனர். அந்த உணவுகளைப் பார்க்கும் போதே எனக்கு பிடிக்க வில்லை.. வேறு ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடினேன்.. சூடான வெண்பொங்கல்.. சாம்பார் சட்னி ஒரு ஓரத்தில் இருந்தது.. பாலைவனத்தில் தண்ணீரைக் கண்டவனின் மனநிலையைப் போன்ற உணர்வு.. ஆவலோடு அருகே சென்றேன்.. பக்கத்திலே சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்தனர்.. அந்த காட்சியைக் கண்ட போது இன்பமாக இருந்தது..
காலை சிற்றுண்டியை உண்டு முடித்து.. எங்கள் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்… பேருந்து பத்து குகை நோக்கி செல்ல ஆரம்பித்தது…
நெல்சனுக்கு பதில் புதிதாக ஒரு கெய்டு வந்தார்.. அவர் பெயர் ரிச்சர்ட்.. தட்டுத் தடுமாறிய தமிழில் பேசினார்..
பத்து குகை பற்றிய வரலாறைக் கூறத் தொடங்கினார்… 1891 ஆம் வருடத்தில் தம்புசாமி பிள்ளை என்பவரால் இந்த கோவில் அமைக்கப்பட்ட கதையை விளக்கினார்..
ஒரு காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
கோலாலம்பூருக்கும் பத்துமலை முருகன் கோவிலுக்கும் 13 கிலோ மீட்டர் தொலைவு இருக்கிறது. பத்துமலையின் உள்ளே பல குகைகள் இருக்கின்றது. அங்குள்ள சுண்ணாம்பு குன்றுகளுக்கு அருகில் பத்து ஆற்றின் பெயரிலிருந்து தான் பத்துமலை என்ற சொல் உருவாகியிருக்கிறது. அந்த சுண்ணாம்புக் குன்றுகளும் 40 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாம்..
ஆரம்ப காலகட்டத்தில் முருகனை தரிசிக்க கரடுமுரடான பாதையில் தான் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அதன்பின்பு தான் 1938 ஆம் ஆண்டில் மலைக் கோயிலுக்கு 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைப்பாதைகள் தரையிலிருந்து 400 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
140.09 அடி உயரத்தில் அங்கு நின்ற வடிவில் இருக்கின்ற முருகனுக்கு தங்கம் போல் மினுமினுக்கும் படி வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. இதற்காக 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றுள்ளது. சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது.
சில மணி நேர பயணத்திற்குப் பிறகு அனைவரும் பத்து மலை முருகன் கோவிலை அடைந்தோம்… சாமி தரிசனம் செய்ய சிலர் படியேறி சென்றனர்… சிலர் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டனர்..
எல்லாம் முடிந்து அனைவரும் மீண்டும் பேருந்துக்குள் நிரம்பினார்கள்..
கென்டிங் ஐலாண்டை நோக்கி எங்களின் அடுத்த பயணம் ஆரம்பமானது..
அங்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக சொல்கிறேன்..
-தொடரும்-
– ர- ஆனந்தன்