கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாகி, தற்போது உலகளாவிய நிறுவனத்தில் பணியில் இருக்கும் திலீப் ராஜேந்திரன் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பதிவு பின்வருமாறு :
இன்று நான் ஒரு முதல் தலைமுறை பி.டெக் (B.Tech) பட்டதாரி ஆனது கலைஞர் அவர்களால் தான். 12-ஆம் வகுப்பிற்கு பின் இரண்டாண்டுகள் ஆசிரியர் பயிற்சியைத் தொடர்ந்து ஏறக்குறைய 3 ஆண்டுகள் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தேன்.
2007-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மருத்துவம்/பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். “நுழைவுத் தேர்வு ரத்து”, “கலைஞருடைய பங்களிப்பில் நடந்த மத்திய அரசின் மூலம் கல்விக்கடன்”, “30% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு (BC Reservation)” மற்றும் “பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை” என்று அனைத்து வகையிலும் அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் தலைவர் கலைஞர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
”நுழைவுத் தேர்வு ரத்தும் -கல்விக்கடனும்” இல்லாவிடில் பொறியியல் படிப்பு என்பது எனக்கெல்லாம் வெறும் கனவாக மட்டுமே இருந்திருக்கும்.
ஒரு சிறிய கிராமத்தில், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்து ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த நான் படிப்பை முடித்து இன்று உலகின் மிகச்சிறந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன் என்றால் அதற்கான முக்கிய காரணம் தலைவர் கலைஞர் அவர்களின் சமூக நீதித் திட்டங்கள்தான். என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தனது சமூகநீதி பார்வையில் கல்வியை நெருக்கத்தில் தந்தவர் டாக்டர் கலைஞர்.
எங்கோ ஒரு முதல் தலைமுறை பட்டதாரி! எங்கோ ஒரு கலைஞர் காப்பீடு பயனாளி! எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி! எங்கோ ஓர் உழவர் சந்தை பயனாளி ! எங்கோ ஒரு பயன்பெற்ற கைம்பெண்! எங்கோ ஓர் அங்கீகாரம் கிடைத்திட்ட திருநங்கை, எங்கோ ஓர் ஊனம் மறந்த மாற்றுத்திறனாளி என்று இவர்கள் யாவருமே தலைவர் கலைஞர் அவர்களை தமிழகத்தில் இன்றும் வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்.