தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாம் நம்முடைய குழந்தைப் பருவங்களைக் கடந்து வரும்பொழுது கட்டாயம் பஞ்சுமிட்டாயை சாப்பிடாமல் கடந்து வந்திருக்கமாட்டோம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பஞ்சுமிட்டாயை ருசிக்காதவர்களே இருக்க முடியாது. திருமண நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள்,திருவிழாக்கள், கடற்கரைகள் என எல்லா இடங்களிலும் இந்த பஞ்சுமிட்டாய் விற்பனையைப் பார்க்கலாம். ஒரு காலத்தில் கிராமப்புறத்தை சார்ந்தவர்கள் மட்டுமே நடத்தி வந்த இந்த தொழிலை தற்போது வடமாநிலத்தவர்கள் தான் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை மெரினாவில் விற்பனை செய்து வந்த பஞ்சுமிட்டாயை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிக நிறமூட்டுவதற்காக ரோட்டமைன் பி எனும் வேதிப்பொருள் அதிக அளவில் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரணம் ரோட்டமைன் பி புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. எனவே பஞ்சுமிட்டாய் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அறிக்கை கொடுத்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் பஞ்சுமிட்டாய் விற்பனை தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரோட்டமைன் பி என்ற வேதிப்பொருளை உணவுப்பொருட்களில் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது.