டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழக அரங்குக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் வழங்கப்பட்டது.
இந்திய பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ஐடிபிஓ) சார்பில், டெல்லி பாரத் மண்டபத்தில் நவம்பர் 13-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 15 நாட்களுக்கு 45-வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வெளிநாடுகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்’ என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட இக்கண்காட்சியில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அரசின் மகத்தான திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், சுற்றுலா, வேளாண்மை மற்றும் உழவர் நலம், தொழில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் சார்பிலும் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியின் கருப்பொருளை மிக சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழக அரங்குக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் அறிவிக்கப்பட்டது.
இதற்கான விருதை, இந்திய பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜாவேத் அஷ்ரப் மற்றும் மேலாண்மை இயக்குநர் நீரஜ் கர்வால் ஆகியோரிடம் இருந்து தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ் பெற்றுக் கொண்டார்.

