தமிழகத்தில் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை: முதல்வர் விஜய்

Priya
14 Views
5 Min Read

தமிழகத்தில் வறட்சியால் 33 சதவீதத்துக்கும் அதிகமாக பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், உடனடியாகப் பயிர்ச் சேதக் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி, உரிய விதிமுறைகளின்படி தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் நிலை, அதன் காரணமாக வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடைத் துறைகளில் எதிர்வரும் கோடைக் காலத்தில் குடிநீர் மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து உயர்நிலை ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று (நவ.27) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாநிலத்தின் மழைப்பொழிவு நிலவரம், அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு, நிலத்தடி நீர்மட்டம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் 25-ம் நாள் வரை மாநிலத்தில் இயல்பைவிட 20 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தபோதிலும், 22 மாவட்டங்களில் மட்டுமே இயல்பைவிடக் குறைவான மழை பதிவாகியுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 32.9 சதவீதமாகவும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏறத்தாழ 73 சதவீத ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வேளாண்மைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பு 18.4 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மழைப்பொழிவு குறைவால் பல மாவட்டங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் கோடைக்காலத்தில் குடிநீர் மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டமிட வேண்டியதன் அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விரிவான ஆய்வுக்குப் பின்னர் முதல்வர் பின்வரும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அவை:

பயிர்ச் சேதங்களுக்கு உரிய நிவாரணம்: 33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், உடனடியாகப் பயிர்ச்சேதக் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி, உரிய விதிமுறைகளின்படி தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதிசெய்ய, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மற்றும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் இதனை நாள்தோறும் கண்காணித்து, தகுதியுள்ள எந்தவொரு விவசாயியும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயவு: மழைப்பொழிவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அடங்கிய குழு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யவும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாயிகளின் தேவைகள் மற்றும் உள்ளூர் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, விரிவான அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை விரிவாக மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளுடன் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்கள்… – பருவமழை பாதிப்புகள், பயிர்ச்சேதங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் தொடர்பான நிலைமையை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோடைக்கால குடிநீர்த் தேவைக்கு விரிவான திட்டம்: எதிர்வரும் 2027-ஆம் ஆண்டின் கோடைக்காலம் முழுவதும் மாநிலம் முழுவதும் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். இதற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள், நீர்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து மாவட்ட வாரியாகவும் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாகவும் குடிநீர்த் தேவைகளைக் கணக்கிட்டு, தேவையான நீர் ஆதாரங்கள், விநியோக ஏற்பாடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைத் தீவனப் பாதுகாப்பு: எதிர்வரும் கோடைக்காலத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவன இருப்பை உறுதிசெய்ய, பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, விவசாயிகளின் நிலங்கள் மற்றும் கால்நடைத்துறைப் பண்ணைகளில் தீவனப் பயிர் சாகுபடியை விரிவுபடுத்துதல், மேய்க்கால் நிலங்களைச் சீரமைத்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சமூகத் தீவன வங்கிகளை அமைத்தல், ஒருங்கிணைந்த தீவனக் கிடங்குகள் மற்றும் சைலேஜ் உற்பத்தி அலகுகளை ஏற்படுத்துதல், மக்காச்சோள சைலேஜ் மற்றும் வைக்கோல் கொள்முதல் செய்து சேமித்தல், கால்நடைத் தீவனத்தை மானிய விலையில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தீவன உற்பத்தி மேம்பாடு மற்றும் கால்நடைத் தீவன மானியத்திற்காக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 13 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, குறிப்பாகத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் போதுமான தீவன இருப்பை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்.

மழைப்பொழிவுக் குறைவால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குதல், பயிர்க் காப்பீட்டின் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், கால்நடைகளைப் பாதுகாத்தல் மற்றும் மாநிலம் முழுவதும் கோடைக்கால குடிநீர் மற்றும் தீவனத் தேவைகளை உறுதிசெய்தல் ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மாவட்டங்களின் நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்துத் துறைகளும் காலதாமதமின்றி செயல்படுத்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நா.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், நிதியமைச்சர் மரிய வில்சன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ.கமலி, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply