தமிழக அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

Priya
19 Views
1 Min Read

தமிழக அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறு கால விடுப்பு அளித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு (Paternity Leave) வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடம் இருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.

குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.

பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.

எனவே, தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் ‘தந்தையர் மகப்பேறு கால விடுப்பு’ வழங்கியும், அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply