‘கிளாட்’ ஏஐ சாட்பாட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் (ஐபிஓ) அந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
இதுகுறித்து நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஹில்.காம் வெளியிட்டுள்ள மதிப்பீடுகளை மேற்கோள்காட்டி சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஐபிஓ மூலம் அந்நிறுவனத்தில் பணிபுரியும் மொத்தமுள்ள 5,300 ஊழியர்களில், சுமார் 5,100 பேரிடம் (96 சதவீதம்) 1 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.9.25 கோடி) அதிகமான மதிப்புள்ள பங்குகள் உள்ளன. அதேபோன்று, சுமார் 2,800 ஊழியர்கள் (மொத்த ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்) குறைந்தபட்சம் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளனர்.
நிறுவனர்கள் அல்லாத சாதாரண ஊழியர்களில் சுமார் 600 பேரிடம் 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.925 கோடி) அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பங்குகள் உள்ளன. அதாவது, நிறுவனத்தின் ஒவ்வொரு 9 ஊழியர்களில் ஒருவர் 100 மில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
இந்த ஐபிஓ மூலம் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 7 இணை நிறுவனர்களின் ஒட்டுமொத்தப் பங்கு மதிப்பு 139 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியிடம் 20.07 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளது. டாம் பிரவுன் 20 பில்லியன் டாலர், சாம் மெக்கண்ட்லிஷ் 19.92 பில்லியன் டாலர், கிறிஸ்டோபர் ஓலா 19.90 பில்லியன் டாலர், டேனியலா அமோடி (தலைவர்), 19.76 பில்லியன் டாலர் உள்ளது.
இவர்களைத் தவிர, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கிருஷ்ணா ராவ் வசம் சுமார் 788.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத் துறையில் சிலிக்கான் வேலி கண்ட மிகப்பெரிய செல்வ உருவாக்க நிகழ்வாக ஆந்த்ரோபிக் ஐபிஓ மாறியுள்ளது.

