“சிறப்பு கண்காட்சி நடத்தும் அளவுக்கு போலி நூல்கள்…” – திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்

Priya
790 Views
1 Min Read

“கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்திடம் இருந்து மட்டும் ரூ.1.74 கோடி மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியுள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளாக யாருடைய ஆட்சி? உலகத்திலேயே இதுபோன்று இதுவரை நடந்தது இல்லை” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “கடந்த 3 ஆண்டுகளாக புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களிடமிருந்து ரூ.1.74 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே புத்தகக் கொள்முதலில் இப்படியான ஓர் ஊழல் நடந்ததில்லை.

தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. எல்லாமே திமுக ஆட்சியில் வாங்கப்பட்டவை தான். போலியான நூல்கள் தனியாகச் சேகரிக்கப்பட்டு வருகின்றன. போலியான நூல்களை மட்டுமே வைத்து சிறப்பு கண்காட்சி நடத்தும் திட்டம் இருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னிமாரா நூலகத்தில் 523 ஏஐ குப்பைகளை நான் கண்டுபிடித்தேன். அப்போது யாருடைய ஆட்சி யாரு இருந்தது? யார் பவுனாம்பாள் கருணாநிதி, யாரு நிவேதா பால்ராஜ்? ஏன் இது குறித்து யாருமே பேசவில்லை. திமுகவில் வாசகர்கள் இல்லையா? கனிமொழி அவர்களே… நீங்கள் கவிஞர்தானே. இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

முதல்வர் விஜய் மற்றும் சர்ச்சைக்குரிய நடிகர், நடிகைகள் பெயரில் எழுதப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலேயே வாங்கப்பட்டவை. இது தொடர்பாகக் காவல் துறை விசாரணை மற்றும் துறை ரீதியான விசாரணை என இரு வேறு விசாரணைகளும் ஒரே நேரத்தில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply