பெங்களூருவில் ரூ.15,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கம்: மெட்ரோ, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Priya
718 Views
2 Min Read

பிரதமர் நரேந்​திர மோடி நேற்று பெங்களூருவில் பிங்க் வழித்தட மெட்ரோ ரயில் சேவையையும், பெங்களூருவில் இருந்து மட்​கா​வுன் செல்​லும் வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடியசைத்து தொட‌ங்கி வைத்​தார்.

பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காலை் டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் பெங்​களூரு எச்.ஏ.எல். விமான நிலை​யத்​துக்கு வந்​தார். அங்கு கர்​நாடக ஆளுநர் சுதா யாதவ், முதல்​வர் டி.கே.சிவகுமார், மத்​திய இணை அமைச்​சர் சோமண்ணா உள்ளிட்​டோர் அவரை வரவேற்​றனர். அங்​கிருந்து ஆனேக்​கலில் அமைந்​திருக்​கும் சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்​தனா சமஸ்தானத்​துக்கு சென்று பிரசாந்தி குதிரம் பொன்​விழா கொண்டாட்​டங்​களில் பங்​கேற்​றார்.

முன்​னதாக ஆனேக்​கல் சாலை​யின் இருபுறமும் குவிந்​திருந்த பாஜக ஆதர​வாளர்​களும், பொது​மக்​களும் பூக்​களை தூவி பிரதமரை வரவேற்​றனர். வாக​னத்​தில் நின்​றவாறு பொதுமக்களை நோக்கி பிரதமர் கையசைத்​தார். அங்கு குவிந்திருந்த இளைஞர் காங்​கிரஸார், ‘ராகுல், ராகுல்’ என முழக்கமிட்​ட​தால் சலசலப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து போலீ​ஸார் அவர்​களை கைது செய்து, வேனில் ஏற்றி சென்​றனர்.

பகல் 12.45 மணிக்கு தாவரக்​கெரேவில் இருந்து பெங்​களூரு ஐ.ஐ.எம். வரையி​லான பிங்க் வழித்​தட மெட்ரோ சேவையை முதல்வர் டி.கே.சிவகுமாருடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்​தார். பின்​னர் ஆளுநர் சுதா யாதவ், முதல்​வர் டி.கே.சிவகுமார் உள்​ளிட்​டோருடன் மோடி மெட்ரோ ரயி​லில் பயணித்​தார்.

இதைத் தொடர்ந்து பெங்​களூரு​வில் உள்ள யஷ்​வந்த்​பூர் ரயில் நிலை​யத்​தில் பெங்​களூரு-மட்​கா​வுன் செல்​லும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இந்த ரயில் ஹாசன், சிக்​கமகளூரு, மங்​களூரு, கோகர்ணா உள்​ளிட்ட கர்நாடக மாநில நகரங்​களின் வழி​யாக கோவாவில் உள்ள மட்​கா​வுனுக்கு செல்​கிறது. இந்த ரயில் மூலம் கோவாவுக்கு 13 மணி நேரத்​தில் செல்​வதுடன், இயற்கை எழில் மிகுந்த‌ காட்​சிகளை​யும் ரசிக்க முடியும் என்று ரயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

இந்த நிகழ்​வைத் தொடர்ந்து பிரதமர் மோடி பெங்​களூரு​வில் ரூ.15,600 கோடி மதிப்​பிலான வளர்ச்சி திட்​டங்​களை தொடங்கி வைத்​ததுடன், நிறைவடைந்த திட்​டங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார். விரிவுபடுத்​தப்​பட்ட சிக்​கமகளூரு, சாம்​ராஜ்நகர், சக்லேஷ்​பூர், சுப்​ரமணியா சாலை ஆகிய 4 ரயில் நிலை​யங்​களை காணொலி மூலம் திறந்​து​வைத்​தார்.

முன்​னதாக பெங்​களூரு​வில் பிரதமர் மோடி பேசுகை​யில், “தொழில்​நுட்​பத் துறை​யில் பெங்​களூரு சர்​வ​தேச நகர​மாக மாறி வரு​கிறது. மெட்ரோ ரயி​லின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளும், புத்​தாக்க முயற்​சிகளும் பெங்​களூரு​வில் ஆரம்பமாக இருக்​கின்​றன. மெட்ரோ ரயில் திட்​டத்​துக்​காக மத்​திய அரசு 50 சதவீத நிதியை வழங்​கி​யுள்​ளது.

அம்​ரித் பாரத் திட்​டத்​தின்​ கீழ் கர்​நாடகா​வில் உள்ள 60க்​கும் மேற்​பட்ட ரயில் நிலை​யங்​கள் அதிநவீன வசதி​களு​டன் மேம்​படுத்​தப்​பட்டு சர்​வ​தேச தரத்​துக்கு விரிவுப்​படுத்​தப்​படு​கின்​றன” என்​றார். இதையடுத்து மைசூரு​வுக்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் அங்கு, சாமுண்டி மலை அடிவாரத்​தில் புதிதாக கட்​டப்​பட்​டுள்ள காஸ்​மோஸ் கோளரங்கை திறந்துவைத்​தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply