மத்திய தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத் தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் நாடு முழுவதிலும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்ட கைப்பேசிகள் 63.68 லட்சம். இவற்றில் திருடப்பட்டு கண்டறியப்பட்டவை 39.34 லட்சம். தொலைந்துபோன, திருடப்பட்ட என இரு வகை கைப்பேசிகளையும் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சிஇஐஆர் (CEIR) மூலம் முடக்க முடியும். எனவே, முடக்கப்பட்ட அனைத்துக் கைப்பேசிகளையும் திருடப்பட்டவை என்று கருத முடியாது.
முடக்கப்பட்ட கைப்பேசிகள் பட்டியலில் முதல் 3 இடங்களில் டெல்லி-என்சிஆர் (10,92,105), மகாராஷ்டிரா (7,74,644), கர்நாடகா (6,25,403) ஆகியவை உள்ளன. அடுத்து உத்தர பிரதேசம் (5,93,830), தெலங்கானா (5,75,138), மேற்கு வங்கம் (3,10,564) ஆகியவற்றுக்குப் பின் 7-வது இடத்தில் தமிழ்நாடு (2,96,962) உள்ளது. இதன் பிறகு மத்தியப் பிரதேசம் (2,76,543), ஆந்திரா (2,47,444), குஜராத் (2,43,356), ராஜஸ்தான் (2,16,006) ஆகியவை உள்ளன.
திருடப்பட்டும் காணாமல் போயும் மீட்கப்பட்ட கைப்பேசிகளில், ஒரு லட்சத்துக்கு மேல் முடக்கப்பட்ட மாநிலங்களில் ஆந்திரா 58.14 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நிலையில் குஜராத் (50.76), உத்தரப் பிரதேசம் (50.19), கர்நாடகா (49.02), ராஜஸ்தான் (48.54), தெலங்கானா (44.85) ஆகியவை உள்ளன. தமிழ்நாடு (43.42) 7-வது இடத்திலும், கடைசி இடத்தில் டெல்லி (8.49) உள்ளன.
காணாமலும் திருடப்பட்டுப் போகும் கைப்பேசிகள் குறித்த தடயங்கள் கிடைத்த பிறகும், காவல் துறையினரால் பாதிக்கும் குறைவாக, அதாவது 37.69 சதவீதக் கைப்பேசிகளை மட்டுமே மீட்க முடிகிறது. கைப்பேசி திருடப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் ‘தொலைந்துவிட்டது’ என்றே புகார் அளிக்கின்றனர்; ‘திருடப்பட்டது’ என்று பதிவாவதில்லை. காவல் துறையினர் கைப்பேசிகளை மீட்கவும் திருடியவர்களைப் பிடிக்கவும் போதிய முயற்சி செய்வதில்லை. இதற்கான செலவு கூடுதலாக இருக்கும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்படுகிறது.

