பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய ஒப்பந்தம்: 2 ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு

Priya
811 Views
1 Min Read

தமிழகத்தில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து பேரவை செயல்பாடுகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

அதே நேரம் பேரவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் சில பகுதிகளும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையாகின.

இதையடுத்து நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்திருந்தார். இந்நிலையில்இதுகுறித்து செய்தித் துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘சட்டப் பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மல்டி கேமரா அமைப்பு மூலம் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும்.

அவற்றை தொகுத்து பின்தயாரிப்பு பணிகளை மேற் கொண்டு, தொலைக் காட்சிகளுக்கு உடனுக்குடன் ஒளிபரப்பு வதற்கான காட்சிகளை வழங்க வேண்டும்.

இதற்காக 2027 ஜனவரி முதல் 2028 டிசம்பர் வரை 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 160 நாட்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளைக் காட்சிப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 80 நாட்கள் வீதம் காட்சிப் பதிவு செய்யப்படும்.

தகுதியான நிறுவனங்கள் https://tntenders.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய நிபந்தனைகள்

நேரலையின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான ‘சைகை மொழி’ விளக்கம் கட்டாயம் இடம் பெற வேண்டும். அவையில் ஏற்படும் அமளி, விதிகளுக்குப் புறம்பான நிகழ்வுகளை திரையில் காட்டக் கூடாது.

ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ திரையில் இடம் பெறக்கூடாது. தமிழக அரசின் இலச்சினை மட்டுமே இடம்பெற வேண்டும்.

திரையில் பேசும் உறுப்பினரின் பெயர், தொகுதி மற்றும் விவாதப்பொருள் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘கேப்ஷன்’ ஆக காட்ட வேண்டும். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை முழுமையாக நீக்கிய பிறகே ஒளிபரப்புக்கு வழங்க வேண்டும்.

எடிட் செய்யப்படாத முழுமையான பதிவு அரசு ஆவணத்துக்காக பத்திரப்படுத்தப்பட வேண்டும். நிறுவன ஊழியர்கள், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடாது.

Share This Article
Leave a Comment

Leave a Reply