ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம், ‘சீன்’. நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் உள்பட பலர் நடித்துள்ளனர். ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது சூர்யா பேசும்போது, “இந்தப் படத்தில் புதிய திறமையாளர்களும், சமூக வலைதளங்கள் மூலம் கவனம் பெற்றவர்களும் இடம்பெற்றுள்ளனர். நஸ்ரியாவைப் போன்ற சிறந்த நடிகையுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி நஸ்ரியாவுடன் நடிக்க வேண்டும் என்று அணுகியும் அவர் சம்மதிக்க வில்லை. 3 அல்லது 4-வது முயற்சிக்குப் பிறகே அவர் நடிக்கச் சம்மதித்தார்.
பல இயக்குநர்களும் நடிகர்களும் அணுகியும் கூட, 12 ஆண்டுகளாக அவர் தமிழில் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். இறுதியில் எங்கள் படத்தில் நடிக்கச் சம்மதித்ததற்கு நன்றி.
ஒரு நடிகையாக நஸ்ரியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் தன்னம்பிக்கையும், விஷயங்கள் குறித்த தெளிவும், ஒரு காட்சிக்காகத் தயாராகும் முறையும் அதிகம் பிடிக்கும். அவரது நடிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கும். இதில் அவர் நடித்துள்ள மாயா என்ற கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. அதைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சண்டைக்காட்சிகளுக்காக நஸ்ரியா எடுத்த முயற்சி படத்தில் தெரியும்” என்றார் சூர்யா.

