நகராட்சித் துறை அதிகாரிகள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்வதற்கான தடைகள் நீங்கியுள்ளன.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவை ஏற்று, வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரியும் முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது எனவும், அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் கூறி கே.என்.நேரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை பகிர்ந்து கொண்ட ஆதாரங்களின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு உத்தரவுகளிலும் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்ற அமர்வு கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவில், “வழக்கில் தொடர்புடைய கே.என்.நேரு தனது துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். எனவே முறைகேட்டுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்வது அவசியம். அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

