மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்: பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

Priya
710 Views
1 Min Read

மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் நாள்தோறும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மருத்துவமனையில் தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் மருத்துவமனை வளாகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவருக்கும் ஊதிய விவரச் சீட்டு மாதந்தோறும் வழங்கப்படும், பிடித்தம் செய்யப்படும் பணம் குறித்த விவரம் தெரிவிக்கப்படும், நாள்தோறும் 8 மணி நேர வேலை மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கைகள் எதுவும் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படாததால், தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒரு பணியாளர் கூறுகையில், எங்களுக்கு நாள்தோறும் வழங்கும் ஊதியம் ரூ.710 முழுமையாக கிடைக்க வேண்டும்.

எங்கள் ஊதியத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை நிறைவேற்றினாலே நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விட்டுவிட்டு எங்கள் பணிகளுக்குச் செல்வோம். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். பணியாளர்கள் போராட்டத்தால், மருத்தவமனையில் தூய்மைப்பணிகள், நோயாளிகளின் வீல் சேர் தள்ளுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply