வங்கக் கடலில் அக்.23-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெறும். தமிழகத்தில் நாளை (அக்.22) டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்.23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது புயலாக வலுப்பெறக்கூடும். தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
23-ம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, சென்னை எம்ஜிஆர் நகரில் 15 செ.மீ., வடபழனியில் 14 செ.மீ., சைதாப்பேட்டை, சென்னை விமானநிலையம், ஆலந்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் தலா 13 செமீ, சென்னை மீனம்பாக்கம், டிஜிபி அலுவலகம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது.
எல் நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை குறைய வாய்ப்பில்லை. அதிகமாகவே பெய்யும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 44 செமீ மழை கிடைக்கும். இந்த ஆண்டு அக்.21-ம் தேதி வரை 11 செமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 12 சதவீதம் அதிகம். வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மழை மானிகளின் தரவுகள் முரண்பட்டு இருப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

