வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான் உலாவிடப் பகுதிகளில் அவசர பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அக்டோபர் 14-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு அந்தப் பகுதிகள் பார்வையாளர்களின் பயன்பாட்டுக்கு மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பூங்காவில் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சிங்கம் மற்றும் மான் உலாவிடப் பகுதிகளில் தேவையான பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பணிகள் தொடங்கும் நாளான அக்.14 முதல் 20 நாட்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த இப்பகுதிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இதனால், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காலத்தில் பார்வையாளர்கள் திறந்திருக்கும் பகுதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூங்கா நிர்வாகத்தின் அறிவிப்பு வெளியான பின்னரே இப்பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். எனவே மக்கள் சிரமங்களைத் தவிர்க்க திட்டமிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

