“அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விஜய்யை வட்டமிட இதுதான் காரணம்!” – ஆர்.பி.உதயகுமார்

Priya
672 Views
2 Min Read

அமைச்சராகும் கனவோடு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்யை சுற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அங்கீகாரமும், அதிகாரமும் வழங்குவதால் தவெகவை செல்வாக்குமிக்க கட்சியாக காட்சிப்படுத்த நினைக்கின்றனர்.

செங்கோட்டையன், நிர்மல் குமார் என மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை அமைச்சராக்கி, தஞ்சம் புகுந்தவர்களுக்கு கட்சிப் பதவிகளை வாரி வழங்குகிறார் விஜய். ஆனால், தனது ரசிகர் மன்றத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு கவுரவமான அரசு சார்ந்த பதவியை விஜய் வழங்குவது இல்லை.

“விஜய்க்காக உழைக்கும் நாங்கள் கட்சி, ஆட்சியில் மற்றும் விஜய்யின் மனதிலும் காணாமல் போய் விடுவோமோ,” என அவரது ரசிகர்கள் புலம்பும் அதிருப்தி தகவல்கள் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வாய்ப்பில்லை.

இதுவரை அதிமுகவில் இருந்துபோன கு.ப.கிருஷ்ணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவர், புஷ்பவனம் குப்புசாமி இயல் இசை நாடக தலைவர், சிங்கை ராமச்சந்திரன் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தலைவர் மற்றும் காஞ்சிபுரம் ரஞ்சித் குமாருக்கு அமைச்சர் பதவி, ஜேசிடி பிரபாகருக்கு சபாநாயகர் பதவியை விஜய் வழங்கியுள்ளார். தவெகவுக்கு மாற்றுக் கட்சியிலிருந்து சென்று போட்டியிட்ட 109 பேரில், வெற்றி பெற்றவர்கள் 49 பேர். அவர்களில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியதாக விஜய்யின் உண்மை ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இது தவிர, அமைச்சர் பதவிக்காக காத்திருப்போர் பட்டியலில் சத்தியபாமா, மரகதம் குமரவேல், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன், வைகைச் செல்வன், கலைராஜன், வெல்லமண்டி நடராஜன், திருச்சி வளர்மதி, சிவபதி என தவெகவில் சமீபத்தில் தஞ்சம் புகுந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், கனவோடு முதல்வரை சுற்றி வருகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிராக மீனவர்கள், மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறைக்கு எதிராக பொதுமக்கள் , படுகொலை சம்பவங்களில் நீதி கேட்டு உறவினர்கள், அரசு ஊழியர்கள் என, தமிழகம் எங்கும் எங்கும் மக்கள் வீதியில் போராடுகின்றனர். ஆனால் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதை தவிர்த்து, அடுத்த கட்சிகளை அபகரிக்க, அழிக்க, கலைக்க நினைக்கும் விஜய் சர்வாதிகார போக்கை விட்டுவிட்டு திட்டங்களை செயல்படுத்த முன்வரவேண்டும்.

இந்த இடைத்தேர்தல் தீர்ப்புக்கு பிறகாவது பிற கட்சிகளை உருகுலைக்கும் வேலையை செய்யாமல், தேவையற்ற முறையில் மக்கள் மீது திணிக்கும் இடைத்தேர்தல்களை தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தை காப்பாற்ற விஜய்க்கு தகுந்த தீர்ப்பை இரு தொகுதிகளிலும் வாக்காளர்கள் வழங்கி இருப்பார்கள் என்பதை நேற்றைய வாக்குப்பதிவு நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply