டெல்லியில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான மத்திய செயலக நூலகத்தை இடமாற்றம் செய்வது குறித்தும், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இடம் தொடர்பான திட்ட விவரங்களைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நூலக விவகாரம் தொடர்பாக செய்திகள் வெளியானதால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் சஞ்சய்குமார், சஞ்சீவ்சச்தேவா அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பழமையான நூலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும், நூலகம் அமைப்பதற்காக ஒதுக்கப்படும் இடத்தின் தள அமைப்புத் திட்டம், முழு விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 2 லட்சம் புத்தகங்களை சேமித்து வைக்க இடம் இருக்குமா? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

