“இந்தியாவில் அமைதி இல்லை” – சஞ்சய் தத் கருத்தால் இணையத்தில் விவாதம்

Priya
759 Views
1 Min Read

நடிகர் சஞ்சய் தத், இந்தியாவில் முன்பு இருந்த அமைதி தற்போது நிலவவில்லை என்றும், நாட்டில் மீண்டும் அமைதியும் நல்லிணக்கமும் திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘சேகர் டுநைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 67 வயதான சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது நாட்டின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், “இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். விருந்தோம்பலில் நாம் சிறந்து விளங்குகிறோம். ஆனால், நம் நாட்டில் முன்பிருந்த அமைதியை என்னால் இப்போது உணர முடியவில்லை. நாட்டில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று நான் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

சஞ்சய் தத்தின் இந்த கருத்து வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். “அவர் எந்தக் காலக்கட்டத்தை அமைதியான காலம் எனக் குறிப்பிடுகிறார்? குண்டுவெடிப்புகளும் வன்முறைகளும் நிறைந்த 1990-களையா?” என்றும், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுதச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற பழைய வரலாற்றை சுட்டிக்காட்டியும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதே நிகழ்ச்சியில், ஐந்து நிமிடங்களுக்கு நாட்டின் பிரதமராகத் தன்னை நினைத்துக்கொண்டு பேசுமாறு சேகர் சுமன் கோரியபோது, சஞ்சய் தத் தனது புகழ்பெற்ற ‘முன்னா பாய்’ பட பாணியில் நகைச்சுவையாக உரையாற்றினார். “பிரதமரான மகிழ்ச்சியைக் கொண்டாட நான் வெளிநாடுகளுக்குப் பறக்க மாட்டேன், உங்கள் மத்தியிலேயே இருப்பேன்” என்று கூறி பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைச் சற்றே நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply