பிரச்சாரம் செய்யாமலேயே நாம் தேர்தல் களத்தில் நிற்க வேண்டும்: ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை கருத்து

Priya
723 Views
2 Min Read

‘உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிகளவில் பெண்களை போட்டியிட வைக்க வேண்டும். பிரச்சாரம் செய்யாமலேயே தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என’, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார்.

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் அக்டோபர் மாதம் முழுவதும் ‘மகளிர் அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு மாதம்’ கடை பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக, காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ‘காமராஜர் விருது’ வழங்கும் விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நடந்தது.

இதில், அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பங்கேற்று, ஆசிரியர் பணி, இயற்கை விவசாயம், பாரம்பரிய கிராமிய இசை, யோகா, கல்வி, தன்னார்வத் தொண்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும், அதிகம் அறியப்படாத 11 சாதனைப் பெண்களுக்கு காமராஜர் விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.

அதைத் தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன.

அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல், சட்டப் பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் நமது இயக்கத்தின் சார்பில் அதிகளவில் பெண்களைப் போட்டியிட வைக்க வேண்டும்.

இந்த இயக்கத்தில் இதுவரை 21 லட்சம் பேர் இணைந்துள்ளனர். எதிர்பார்த்ததைவிட அதிக வேகத்தில் நமது இலக்கை நோக்கிப்பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது. இன்னும் பல மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறோம். தற்போது நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாம் ஓர் அரசியல் அமைப்பாக மாறும்போது, பிரச்சாரம் செய்யாமலேயே தேர்தல் களத்தில் நிற்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்கான அவசியமே இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரத்தின் கடைசி நாளில் மட்டும் மக்களைச் சந்திக்கும் நிலையை உருவாக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கித்தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், ஊடகம், பிரச்சாரம், மக்கள் தொடர்பு பொதுச் செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன், நிர்வாகிகள் சாய் சத்யன், மனோகரன், சுமதி வெங்கடேசன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply