ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடிக்கு தங்கம்

Priya
611 Views
8 Min Read

20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 7-வது நாளான நேற்று துப்​பாக்கி சுடு​தலில் 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் கலப்பு அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் சுருச்சி சிங், கமல்​ஜீத் ஜோடி 484.6 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றது. நடப்பு ஆசிய விளை​யாட்டு தொடரில் துப்​பாக்கி சுடு​தலில் இந்​தியா கைப்​பற்​றும் முதல் தங்​கப் பதக்​கம் இது​வாகும்.

தென் கொரி​யா​வின் கேயூன் சூ, சுஹியோன் ஹாங் ஜோடி 478 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், ஈரானின் ரோஸ்​டா​மி யன் ஹனியே, கோல்​கந்​தன் வஹித் ஜோடி 415.8 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றன.

வெள்ளி பதக்​கம்

ஆடவருக்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொஷிசன் பிரி​வில் ஐஸ்​வரி பிர​தாப் சிங் தோமர், ருத்​ராங்க் ஷ் பாட்​டீல், நீரஜ் குமார் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 1,762 புள்​ளி​களை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது. சீனா 1,766 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​க​மும், கொரியா 1,751 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்க​மும் வென்​றன.

50 மீட்​டர் ரைபிள் 3 பொஷிசன் தனி​நபர் பிரிவு தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஐஸ்​வரி பிர​தாப் சிங் தோமர் 589 புள்​ளி​களு​டன் 3-வது இடமும், நீரஜ் குமார் 588 புள்​ளி​களு​டன் 4-வது இடமும் பிடித்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறினர். ஆனால் இறு​திப் போட்​டி​யில் இவர்​கள் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தத் தவறினர். ஐஸ்​வரி பிர​தாப் சிங் தோமர் 327.6 புள்​ளி​களு​டன் 5-வது இடம் பிடித்​தார். நீரஜ் குமார் 299 புள்​ளி​களு​டன் கடைசி இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

பாரிஸ் ஒலிம்​பிக் சாம்​பிய​னான சீனா​வின் யுகுன் லியு 360.5 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். மற்​றொரு சீன வீர​ரான சாங்​ஹாங் ஜாங் 360.2 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். கஜகஸ்​தானின் சத்​பயேவ் இஸ்​லாம் (348.3) வெண்​கலப்​ பதக்​கம்​ வென்​றார்​.

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் டேபிள் டென்​னிஸில் கலப்பு இரட்​டையர் கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் தியா சித்​தலே, மனுஷ் ஷா ஜோடி, உலகத் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள ஹாங் காங்​கின் டூ ஹோய் கெம், வோங் சுன் டிங் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது.

இதில் தியா சித்​தலே, மனுஷ் ஷா ஜோடி 11-6 13-15 11-9 11-5 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது. ஆனால் அரை இறு​தி​யில் தியா சித்​தலே, மனுஷ் ஷா 8-11, 5-11, 8-11, 2-11 என்ற செட் கணக்​கில் சீனா​வின் சன் யிங் சில்​லி, வாங் சுகின் ஜோடி​யிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றது.

கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தியா கடைசி​யாக கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் வெண்​கலப் பதக்​கம் (மணிகா பத்​ரா, சரத் கமல் ஜோடி) வென்​றிருந்​தது. அதன் பின்​னர் 8 வருடங்​களுக்கு பிறகு தற்​போது தியா சித்​தலே, மனுஷ் ஷா ஜோடி வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​யுள்​ளது.

சாட்விக்-ஷிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

ஆசிய விளையாட்டு பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் 21-12, 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் பக்கபொன் தீரரட்சகுல், பீரட்சை சுக்புன் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஸ்குவாஷில் 3 பதக்கங்கள் உறுதி

ஆசிய விளை​யாட்டு ஸ்கு​வாஷில் நேற்று கால் இறுதி சுற்று நடை​பெற்​றது. இதில் மகளிர் பிரி​வில் இந்​தி​யா​வின் அனஹத் சிங் 11-2, 11-5, 11-3 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த தன்வி கன்​னாவை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறி​னார். அரை இறுதி சுற்​றில் அனஹத் சிங், ஜப்​பானின் சடோமி வத்தனாபேவுடன் மோதுகிறார்.

ஆடவர் பிரி​வில் இந்​தி​யா​வின் அபய் சிங் 11-4, 11-3, 11-6 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் ரியோனோசுக்கே சுகு​வேவை வீழ்த்​தி​னார். அரை இறு​தி​யில் அபய் சிங், பாகிஸ்​தானின் இர்ஃ​பான் முகமது​வுடன் மோதுகிறார். இர்ஃ​பான் முகமது கால் இறுதி சுற்​றில் 6-11, 11-8, 11-3, 11-3 என்ற செட் கணக்​கில் இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானியை வீழ்த்​தி​னார்.

கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்​னப்​பா, வேல​வன் செந்​தில்​கு​மார் ஜோடி 11-3, 11-5 என்ற செட் கணக்​கில் பிலிப்​பைன்​ஸின் டேவிட் பெலினோ, ஜெமிகா அரிபடோ ஜோடியை வீழ்த்​தி​யது. இன்று நடை​பெறும் அரை இறு​தி​யில் இந்​திய ஜோடி, ஹாங்​காங்​கின் யோ கா லீ, மிங் ஹாங் டாங் ஜோடியை எதிர்​கொள்​கிறது. ஜோஷ்னா சின்​னப்​பா​வும், வேல​வன் செந்​தில் குமாரும் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள்.

அரை இறு​தி​யில் கால்​ப​தித்​துள்​ளதன் மூலம் அனஹத் சிங், அபய் சிங் ஆகியோ​ருடன் ஜோஷ்னா சின்​னப்​பா, வேல​வன் செந்​தில் குமார் ஜோடி​யும் குறைந்​த​பட்​சம் வெண்​கலப் பதக்​கம் வெல்​வதை உறுதி செய்​துள்​ளது. ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஜோஷ்னா சின்​னப்பா 6-வது முறை​யாக பதக்​கம் வெல்ல உள்​ளார்.

40 வயதான ஜோஷ்னா சின்​னப்​பா, 2018-ம் ஆண்டு போட்​டி​யில் ஒற்​றையர் பிரி​வில் வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்​தார். 2014 மற்​றும் 2018-ம் ஆண்​டு​களில் அணி​கள் பிரி​வில் வெள்​ளிப் பதக்​க​மும், 2010 மற்​றும் 2022-ம் ஆண்​டில் அணி​கள் பிரி​வில் வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றி​யிருந்​தார்​.

போல் வால்ட்டில் வெண்கலம் வென்று பரணிகா சாதனை

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் நேற்று மகளிக்​கான போல் வால்ட் இறு​திப் போட்டி நடை​பெற்​றது. இதில் ஜப்​பானின் மிசாகி மொரோட்டா 4.55 மீட்​டர் உயரம் தாண்டி தங்​கப் பதக்​க​மும், சீனா​வின் சுங்கே நியு 4.50 மீட்​டர் உயரம் தாண்டி வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர். இந்​தி​யா​வின் பரணிகா இளங்​கோவனும், கஜகஸ்​தானின் போலினா இவனோ​வா​வும் தலா 4.15 மீட்​டர் உயரம் தாண்டி வெண்​கலப் பதக்​கம் வென்​றனர். இரு​வருமே 4.25 மீட்​டர் உயரத்தை தாண்​டத் தவறினர். ஆசிய விளை​யாட்​டில் போல் வால்ட்​டில் இந்​தியா பதக்​கம் வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும். 29 வயதான பரணிகா இளங்​கோவன் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​ ஆவார்​.

மகளிர் ஹாக்கியில் 4-வது வெற்றி

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மகளிர் ஹாக்​கி​யில் இந்​திய அணி தனது 4-வது லீக் ஆட்​டத்​தில் நேற்று ஜப்​பானுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய மகளிர் அணி தரப்​பில் லால்​ரெம்​சி​யாமி (5-வது நிமிடம்), இஷிகா சவுத்ரி (30-வது நிமிடம்), நவ்​னீத் கவுர் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர்.‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய மகளிர் அணிக்கு இது தொடர்ச்​சி​யான 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. இந்​திய மகளிர் அணி முதல் ஆட்​டத்​தில் 19-0 என்ற கோல் கணக்​கில் உஸ்​பெகிஸ்​தானை​யும், 2-வது ஆட்​டத்​தில் 17-1 என்ற கோல் கணக்​கில் இந்​தோ​னேஷி​யா​வை​யும், 3-வது ஆட்​டத்​தில் 20-1 என்ற கோல் கணக்​கில் தாய்​லாந்​தை​யும் தோற்​கடித்து இருந்​தது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் 12 புள்​ளி​களு​டன் அரை இறு​திக்கு முன்​னேறு​வதை உறு​திப்​படுத்​திக் கொண்​டது இந்​திய மகளிர்​ அணி.

கால் இறுதியில் சச்சின் சிவாச்

ஆட​வருக்​கான குத்​துச்​சண்​டை​யில் 60 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் சச்​சின் சிவாச் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் ஜோர்​டானின் முகமது அட்​னான் அபுவுடன் மோதி​னார். இதில் சச்​சின் சிவாச் 4-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். மகளிருக்​கான 54 கிலோ எடைப் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இந்​தி​யா​வின் ப்ரீத் பவார் 0-5 என்ற கணக்​கில் வட கொரி​யா​வின் பாங் சோலிடம் தோல்வி அடைந்​தார்​.

கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணிகள்

ஆசிய விளையாட்டு கபடி அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி 66-28 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 48-24 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் பதித்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு பிரிவிலும் இந்திய அணிகள் ஈரானை எதிர்கொள்கின்றன.

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான 10 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் குல்​வீர் சிங் பந்தய தூரத்தை 28:29.38 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். ஹாங்​சோ​வில் கடந்த 2022-ல் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டில் அவர், வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்​தார். பக்​ரைனின் பிர்​ஹானு பாலேவ் பந்தய தூரத்தை 28:27.51 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். அதே நாட்​டைச் சேர்ந்த ஆல்​பர்ட் கிப்டோ (28:34.18) வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்​.

குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார் மன்பிரீத் கவுர்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மகளிருக்​கான குண்டு எறிதலில் இந்​தி​யா​வின் மன்​பிரீத் கவுர் 17.17 மீட்​டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் சாங் ஜியு​வான் (19.40), ஜாங் லின்ரு (18.14) ஆகியோர் முறையே தங்​கம் மற்​றும் வெள்​ளிப் பதக்​கங்​களை வென்​றனர். மற்​றொரு இந்​திய வீராங்​க​னை​யான கிருஷ்ணான ஜெயசங்​கர் மேனன் (16.57) 5-வது இடம் பிடித்​தார். இவர், தமிழகத்​தைச் சேர்​ந்​தவர்​ ஆ​வார்​.

பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 12-வது இடம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் 7-வது நாளான நேற்​றைய முடி​வில் பதக்க பட்​டியலில் இந்​தியா 2 தங்​கம். 9 வெள்​ளி, 12 வெண்​கலத்​துடன் 23 பதக்​கங்​கள் பெற்று 15-வது இடத்​தில் இருந்து 12-வது இடத்​துக்கு முன்​னேறியது.

சீனா 98 தங்​கம், 37 வெள்​ளி, 24 வெண்​கலம் என 159 பதக்​கங்​களு​டன் முதலிடத்​தி​லும், ஜப்​பான் 28 தங்​கம், 43 வெள்​ளி, 44 வெண்​கலம் என 115 பதக்​கங்​களு​டன் 2-வது இடத்​தி​லும், தென் கொரியா 13 தங்​கம், 17 வெள்​ளி, 34 வெண்​கலம் என 64 பதக்​கங்​களு​டன் 3-வது இடத்​தி​லும்​ உள்​ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply