மலையாள நடிகரான உன்னி முகுந்தன், தமிழில் சீடன், கருடன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘மார்கோ’ படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக பிரபலமான இவர், இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை இந்தி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டூடியோஸ், உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இது உன்னி முகுந்தனின் 50- வது திரைப்படம்.
இதுகுறித்து உன்னி முகுந்தன் கூறும்போது,“50-வது திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை எழுதி, இயக்குவது கூடுதல் பொறுப்பைக் கொடுத்துள்ளது. எனது சொந்த கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை, எனக்கு எப்போதும் உண்டு. அதற்கான சரியான கதையும் சரியான தருணமும் இதுதான் என்று உணர்ந்தேன். இந்தத் திரைப்படம் பல்வேறு மொழிகள் பேசும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும்” என்றார். இப்படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

