அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்துடன் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Priya
725 Views
2 Min Read

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தால் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில், உலகளாவிய திறன் மையத்தை நிறுவ முன்வந்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் முதல்முறையாக, தமிழ்நாட்டில் தனது உலகளாவிய திறன் மையத்தை நிறுவ முன்வந்துள்ளது. இந்தியாவில் தனது சில்லறை வணிக கூட்டு நிறுவனமான டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்நிறுவனம் தனித்து இயங்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், உலகளாவிய திறன் மையம் துறையில் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ்நாட்டின் உலகளாவிய திறன் மையம் வளர்ச்சிப் பயணத்தில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன், இந்தியாவை நாங்கள் மிகவும் முக்கியமான நாடாகக் கருதுவதாகவும், சென்னையில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏராளமாக உள்ள நிலையில், இவ்வல்லுநர்கள் பணியில் சேரும் நிறுவனங்களில் நீண்ட காலம் பணியில் தொடர்வதும், தமிழ்நாட்டிலுள்ள சிறந்த உட்கட்டமைப்பும், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கமும், புதிய தீர்வுகளைக் காணவும், வணிகத்தை வளர்க்கவும் உதவும் என்று தெரிவித்தார்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னர், முதல்வர் விஜய், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் தனது உலகளாவிய மையத்தை சென்னையில் அமைப்பது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றும், உலகப் புகழ்பெற்ற இத்தகைய பெரிய நிறுவனம் நமது மாநிலத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை, நமது இளைஞர்களின் திறமைக்குக் கிடைத்த சான்றாகும் என்றும், இந்த முதலீடு, இதுபோன்ற உயர் நிறுவனங்கள் வருவதற்குத் தமிழ்நாடு ஒரு சிறந்த இடம் என்பதை நிரூபிக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள திறமையான இளைஞர்களுக்குப் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்துடனான இப்பயணம் நீண்ட காலம் வெற்றிகரமாகத் தொடர தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றம் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply